நாகர்கோவில் மாவட்டம் களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடையே அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தவ்பீக்கின் தாயாரான நாகர்கோவில் கோட்டாறு இளங்கடையைச் சேர்ந்த ஜீனத், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "என் மகன் தவ்பீக் ஆட்டோ டிரைவராக இருந்தார். பின்னர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றார். தவ்பீக் மனைவி தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2015இல் பாஜக நிர்வாகி முத்துராமனை தாக்கிய வழக்கில் ஏர்வாடி காவல் துறையினர் தவ்பீக் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பியபோது தவ்பீக்கை விமான நிலையத்தில் வைத்து ஏர்வாடி வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தவ்பீக் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி வருகிறார். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தவ்பீக் சென்னை செல்வதாகவும், இரண்டு நாளில் திரும்பி வருவதாகவும் கூறிச் சென்றார். அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இது தொடர்பாக கோட்டாறு காவல் துறையில் புகார் அளித்தபோது அவர்கள் அந்த புகாரை வாங்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8இல் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய இருவரின் வீடியோவை காவல் துறையினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில் ஒருவர் தவ்பீக் போல் இருந்தார். பின்னர், வில்சன் கொலை வழக்கில் தவ்பீக் மற்றும் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
மேலும் சமூக விரோதிகளுக்கு பாடம் கற்பிக்க தவ்பீக், சமீம் ஆகியோரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது தினமும் 15 முதல் 20 காவலர்கள் எங்கள் வீட்டைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிலிருந்து யாரும் எதற்காகவும் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் என் மகனை காவல் துறையிர் என்கவுண்டரில் கொலை செய்ய அதிக வாய்ப்புள்ளது. எனவே என் மகன் தவ்பீக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரின் மகன் தவ்பீக், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளை இயக்கிய தலைவன் யார்? - கியூ பிரிவு காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை