மதுரை : காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் வலையங்குளம் கிராமத்தில் விபத்தை தடுக்கும் வகையில் பாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் உள்ள வலையங்குளம் கிராமத்தில் அவ்வப்போது ஏற்படும் வாகன விபத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் சாலையைக் கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாணிக் தாகூர், அலுவலர்களிடம் பாலத்தின் கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். அந்த கேள்வி பதில்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.
- ”பிகார் மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று பரப்புரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்குறுதி கொடுத்துள்ளாரே?
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது. எனவே நிர்மலா சீதாராமன் தனது பதவியைத் துறந்து, பாஜகவின் பரப்புரை பீரங்கியாக செயல்படலாம்.
- தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்க அதிகமான முதலீடு செய்துள்ளதாக அரசு கூறுகிறதே?
முதலீடு என்பது வேறு; வேலைவாய்ப்பு என்பது வேறு. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு என்பது அமைச்சர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டங்களாகவே உள்ளது. இதில் மத்திய - மாநில அரசுகள் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
- தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடுவதாக கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனரே?
அது, பாஜகவின் நம்பிக்கையாக இருக்கலாம்; அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே 2011 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது. எனவே வரும் தேர்தலில் அதைவிட கூடுதலான வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது.
- ரஜினிகாந்த் விரைவில் பாஜகவில் இணைவார் என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறினாரே?
தமிழ்நாட்டில் நடிகர்களை எல்லாம் பாஜகவில் இணைத்துக் கொண்டு வெற்றி பெறலாம் என்று பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது. வருமான வரித் துறையை கையில் வைத்துக்கொண்டு, கோடம்பாக்கத்தில் இருக்கும் நடிகர்கள் அனைவரையும் மிரட்டிவருகிறார்கள்.
- 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அமல்படுத்த, ஆளுநர் காலம் தாழ்த்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட சட்ட வடிவை அமல்படுத்தாமல், ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது வெட்கக்கேடான செயல். ஆளுநர் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார்” என்றார்.