மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்டுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் அரசு நியாயவிலை கடைகளுக்கு அரிசியாக மாற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு இக்கிட்டங்கியிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு உத்தரவை அலட்சியம்படுத்தும் விதமாக அங்கு பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பு முகக் கவசங்களின்றி நெல் மூட்டைகளை சுமந்து செல்கின்றனர். பாதுகாப்புக்கு முகக் கவசங்களின்றி ஒரே இடத்தில் பணியில் ஈடுபட்டு வருவது கரோனா பெருந்தொற்று சமூக பரவலுக்கு வழிவகுக்கும் என்பதை உணராமல் அரசு அலுவலர்கள் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும், இதில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என சுமைதூக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.