மதுரை பழங்காநத்தத்தில் இன்று திமுகவின் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் தளபதி, மதுரை மேற்கு சின்னம்மாள், மதுரை மத்தி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை தெற்கில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ”ஏற்கனவே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். அதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக எம்பி ஒருவர் வெற்றி பெற்றார். அவர் பாஜக எம்பியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, அதிமுக வெற்றி பெறுவதும் பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான்.
காவிரி உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடியவில்லை. வர வேண்டிய நிதியை பெற முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர முடியவில்லை. ஆனால் நான் தற்போது சொல்கிறேன். எந்தத் திட்டம் கிடப்பில் இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது நிறைவேற்றப்படும்.
பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பலரும் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். முதலமைச்சரும், அமைச்சர்களும் கோட்டுப் போட்டுக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று வந்தார்களே தவிர, எந்த முதலீடும் வரவில்லை. வேலை இல்லாமல் இளைஞர்கள், பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பதை போல, மதுரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் ஒரு பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும். பூக்களை சேமிக்க குளிர்பதனக் கிடங்கு, ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட பல திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: "வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்காதீர்கள் ஸ்டாலினிடம் கேளுங்கள்"- ஆதி ராஜாராம்