ஜியாமென், சீனா: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப்பை அவரது இயல்புக்கு மாறாக அமைதியான புத்தர் போன்று தோற்றம் அளிக்கும் சிலையாக சீன சிற்பி வடிவமைத்துள்ளார். அந்த சிலை ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகிறது.
டொனால்டு டிரம்ப் அமைதியே உருவானவர் அல்ல. சீனாவின் கிராமப்பகுதியில் உள்ள சிற்ப கூடத்தில் சிற்ப கலைஞர் ஒருவர், டிரம்ப்பின் சிலையை அமைதியே உருவான புத்தர் போல வடிவமைத்திருக்கிறார். கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையில், அரை கண்களை மூடியபடி புத்தரைப்போல பிரதிபலிக்கும் இந்த சிலை, அமெரிக்காவின் முரண்பாடுகளின் மொத்த உருவத்தின் தலைவரான டொனால்டு டிரம்ப்பின் பீங்கானால் ஆன இந்த சிலையை வடிவமைத்தவர் ஹாங் ஜின்ஷி என்ற சிற்பி ஆவார்.
ஜென் துறவி போல தோற்றமளிக்கும் டிரம்ப் முகத்தோற்றம் கொண்ட சிலைகளை ஹாங் ஜின்ஷி இந்திய மதிப்பில் ரூ.11,000 முதல் ரூ.2.30 லட்சம் வரை விற்பனை செய்கிறார். முதன் முதலில் இந்த சிலையை அவர் 2021ஆம் ஆண்டு வடிமைத்து Taobao இ-வணிக தளத்தின் மூலம் விற்பனை செய்தார். அப்போது ஊடகங்களிலும் இது குறித்த செய்தி வெளியானது. ரியல் எஸ்டேட் அதிபராக தொழிலில் ஈடுபட்ட டொனால்டு டிரம்ப் இப்போது இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ள நிலையில் புத்த வடிவிலான இந்த சிலை மீண்டும் பரபரப்பான விற்பனையில் இருக்கிறது.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வு மகா கும்பமேளா 2025 தொடக்கம்...பக்தர்களுக்கு பிரதமரின் சிறப்பு தின செய்தி
இது குறித்து பேசிய சிற்ப கலைஞர் ஹாங் ஜின்ஷி,"அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற சில நாட்களில் இந்த சிலைக்கு மீண்டும் தேவை அதிகரித்துள்ளது. ஒரு நகைச்சுவைக்காகவே இந்த சிலையை நான் வடிவமைத்தேன். பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால் போரடிப்பவர்களாக இருப்பார்கள்.ஆனால், டிரம்ப் பெரும் அளவில் ஆன்லைனில் பேசப்படும் நபராக இருக்கிறார். அடிக்கடி அருமையான விஷயங்களையும் சொல்கிறார். டிரம்ப்பின் இயல்புக்கு மாறானதாக இந்த சிலை வடிவமைப்பு இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு புன்னகையை வரவழைக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சிலைகளை விற்பனை செய்திருக்கின்றேன்,"என்றார்.
"உங்கள் நிறுவனத்தை மீண்டும் சிறப்பாக்குங்கள்" என்பது டிரம்ப் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாகும். இந்த வார்த்தையை சீன மொழியில் மொழி பெயர்த்து அதனை டிரம்பின் சிலையிலும் சிற்பி பொறித்துள்ளார். ஹாங் ஜின்ஷி வடிவமைத்த சிலையை காப்பி அடித்தது போல மேலும் சிலரும் இது போன்ற சிலைகளை உருவாக்கி அமேசான், தேமு போன்ற ஆன்லைன் தளங்களில் 45 டாலருக்கு பலரும் விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் பரபரப்பாக விற்பனை ஆகிறது.
டிரம்ப்பை போலவே அவரது நண்பர் எலான் மஸ்க் சிலையையும் ஹாங் ஜின்ஷி வடிவமைத்து வருகிறார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்பின் சீன கொள்கை குறித்து ஹாங் ஜின்ஷி கருத்துக் கூற மறுத்து விட்டார். இதனிடையே சீன மொழி இணையதளங்களில் டொனால்டு டிரம்ப்பின் புத்தர் போன்ற சிலையை விற்பதை சீன அரசு தடுத்து வருகிறது. எனினும் தமது சிற்ப கூடத்துக்கு வருபவர்கள் டொனால்டு டிரம்பின் புத்தர் வடிவ சிலையை கேட்டு வாங்குவதாக ஹாங் ஜின்ஷி கூறுகிறார்.