தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது நடைபெற்றுவரும் கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு ஏறக்குறைய நிறைவு பெற்றுள்ள நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அந்த இடத்தை சுற்றுலாத் தலமாக்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்களை அறிய கீழடியை 1973ஆம் ஆண்டு கண்டறிந்து, உலகிற்கு முதன் முதலாகத் தெரிவித்த உள்ளூர் ஆசிரியர் பாலசுப்ரமணியத்தை ஈடிவி பாரத் செய்திகளுக்காகச் சந்தித்தோம்.
சிறப்பு மதிப்பெண் கொடுத்து ஊக்குவிப்பு:
அவர் கூறியதாவது, “எனது ஆசிரியர் பணியில் பல்வேறு கிராமங்களுக்கு பணியிடமாறுதல் அடிப்படையில் சென்று பணியாற்றும் போதெல்லாம், அங்குள்ள மாணவர்களிடம் அப்பகுதியில் கிடைக்கும் பழமையான பொருட்கள் குறித்துக் கேட்பது வழக்கம். அவ்வாறு கொண்டு வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கி சிறப்பிப்பேன்.
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
அந்தவகையில், கீழடியில் பணியாற்றும்போது என்னுடைய மாணவர்கள் சிலர், தங்கள் பகுதியில் கிடைத்த மிகப் பழமையான பொருட்களை என்னிடம் வந்து காண்பித்தனர். அது எங்கே கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களோடு சென்று கீழடி புஞ்சை மேற்குப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்கே கருப்பு, சிவப்பு மண் பாண்டங்கள், பானை ஓடுகள், ராஜராஜசோழன் நாணயம், மண்டை ஓடுகள், மனித உருவங்கள் பொறித்த சுதைச் சிற்பங்கள் உள்ளிட்டவற்றைத் தேடி எடுத்துக்கொண்டு வந்தேன். அதனை எங்களது பள்ளியில் காட்சிப்படுத்தி வைத்தோம்.
கிழடி பொருட்களை காட்சிபடுத்திய தருணம்:
அச்சமயம் மதுரை திருமலை நாயக்கர் அரங்கில் ஆசிரியர்களுக்காக தொல்லியல் பயிற்சி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்க நானும் தேர்வாகி இருந்தேன். அப்போது என்னுடன் தமிழறிஞர்கள், தமிழண்ணல் தொ. பரமசிவன், மு. ராமசாமி, கே.ஏ குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அந்த பயிலரங்கை ஒருங்கிணைத்தவர் அப்போது தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த நாகசாமி. அவரிடம் நான் கண்டெடுத்த பொருட்கள் குறித்துக் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அவரே நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இவையெல்லாம் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதிப்படச் சொன்னார்.
கீழடியில் மேலும் தோண்டினால் உண்மையான வரலாறு தெரியும் - ஹெச்.ராஜா
அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வு:
அதன் பிறகு 2013ஆம் ஆண்டு, மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அமர்நாத் ராமகிருஷ்ணா, வைகை கரையில் பல்வேறு பழமையான ஊர்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அச்சமயம் எனது நண்பர் தொல்லியல் அறிஞர் வேதாசலம் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்தார். நானும் அவர்களை கீழடி அழைத்துச்சென்று காண்பித்தேன். அங்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு அவர்களும் ஆய்வு செய்து விடலாம் என முடிவு செய்து, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்றனர்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கீழடியை அமர்நாத் ராமகிருஷ்ணா தேர்ந்தெடுப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று மேற்புற ஆய்விலேயே பல்வேறு பழமையான பொருட்கள் இங்கு கிடைத்தன. இரண்டாவது மிகப்பழமையான பாண்டிய மன்னர்களின் தலைநகரமான மதுரைக்கு அருகிலேயே கீழடி அமைந்திருப்பது. மூன்றாவதாக மிக எளிதான போக்குவரத்து வசதி இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கீழடியை, தங்களுக்கான அகழ்வாய்வு களமாக மத்திய தொல்லியல் துறை தேர்வு செய்தது” என்றார்.
தமிழர் தொன்மை காப்போம் - கீழடியில் சமுத்திரகனி
தமிழ்நாடு தொல்லியல் துறை தாமதம் ஏன்?
1973ஆம் ஆண்டிலேயே, இந்த இடத்தை தாங்கள் கண்டறிந்தை தமிழ்நாடு தொல்லியல் துறை அறிந்திருந்தும் கூட, ஏன் இத்தனை ஆண்டுகள் இடைவெளி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இது மிகவும் சிக்கலான கேள்வி. ஆனால் அந்த சமயத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை பல்வேறு இடங்களில், குறிப்பாக கொடுமணல், பூம்புகார், அழகன் குளம், ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. அதுமட்டுமன்றி கீழடி குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததும் காரணமாக இருக்கக்கூடும்.
ஆனால் இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தற்போது கேரளாவில் பட்டணம் பகுதியில் நடைபெறுகின்ற அகழாய்வு பணிகள், அந்த மாநில தொல்லியல் துறையால் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த அகழாய்வு பணிகளில் பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, கேரள அரசு மேற்கொண்டு வருகிறது என்பது தான் மிக முக்கியமான செய்தி. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறு ஒருங்கிணைப்புடன் நடைபெறுவதில்லை.
5ஆம் கட்ட கீழடி அகழாய்வு - நூலாக வெளியிட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை
இதுவரையில் தமிழ்நாட்டைக் குறித்த ஒரு முழுமையான வரலாறு கூட நமது அரசுகளால் தர முடியவில்லை. தமிழர் இனம், பண்பாடு ,மொழி என்று பேசுகிறார்களே தவிர; செயல்பாடுகளில் பெரும் பின்னடைவு தான் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக ஆளுகின்ற மாநில அரசுகள், தங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்க முடியும்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கீழடி அகழாய்வை ஆய்வாக மட்டுமே பார்க்கவேண்டும். அதனைத் தமிழர் பண்பாடு, மொழி, இனம் என்று நமது உணர்வோடு பொருத்திப் பார்ப்பது சரியல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கீழடி மட்டுமே தொன்மையான இடமல்ல. பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் ஆய்வு செய்யத் தொடங்கினால், நமது வரலாற்றுக் காலம் இன்னும் முன்னோக்கிச் செல்லும் என்பதுதான் என்னுடைய கருத்து என்று கூறி நிறைவு செய்தார் ஆசிரியர் பாலசுப்பிரமணியம்.