மதுரை: கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதியில் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா மாளிகையின் வளாகம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ஆகும்.
ஆகையால், மதுரை மாவட்டம், மாநகர் பகுதியைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்காக அண்ணா மாளிகையில் ஆங்காங்கே அமர்ந்து படிப்பது வழக்கம்.
காலை 9 மணிக்கு இந்த வளாகத்திற்குள் நுழையும் மாணவர்கள் மாலை 7 மணிவரை அமர்ந்து படித்துவிட்டு செல்கின்றனர். சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் இந்த வளாகத்தை பயன்படுத்துகின்றனர். இது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள் தங்களுக்கென நூலகம் அமைத்து தர வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாநகராட்சி ஆணையரின் திட்டம்
அண்மையில் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சாதாரண அலுவலரைப் போன்று இந்த மாணவர்களிடம் தான் யாரென்று காட்டிக் கொள்ளாமலேயே உரையாடி அவர்கள் குறித்தும் அவர்களது வேண்டுகோள் என்னவென்றும் கேட்டறிந்தார்.
இதனையடுத்து, சீர்மிகு நகர (Smart City) திட்டத்தின்கீழ் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அடங்கிய பிரம்மாண்ட நூலகம் உள்பட ரூ. இரண்டு கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் உருவாக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்குள்
தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட இந்த வளாகம் நூலகம், படிப்பறை பயிற்சி மையம், லாக்கர் உள்ளிட்டவற்றை கொண்டதாக செயல்படும். இந்த கட்டடத்திற்கான மாதிரி வரைபடத்தையும் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரும் கூட்டம் நடைபெறும். இந்த கட்டடத்தை அடுத்த 12 மாதங்களில் முழுமையாகக் கட்டி முடிக்க மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். போட்டி தேர்வுகளுக்காக தங்களைத் தயார் செய்து கொள்ளும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் தரிசனம் தருவார் மீனாட்சி அம்மன்!