மதுரை: ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார். இந்த வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது. கரோனா சிறைவாசிகளுக்கும் பரவிய நிலையில், எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்க கோரி மனு அனுப்பினேன். அதனை ரத்து செய்து விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கொரோனா காலம் என்பதால் விடுப்பு வழங்க இயலாது அதனை உரிமையாக கோர முடியாது என பதிலளிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ரவிச்சந்திரனின் தாயார் உடல்நலக்குறைவிற்காக ஓராண்டிற்கு முன்பு விண்ணப்பம் மனு குறித்து அரசு தரப்பு பரிசீலனை செய்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நீட் முறைகேடால் சிபிஐ தரப்பில் கால அவகாசம் கோரல்: விசாரணை ஒத்திவைப்பு