தஞ்சாவூர்: பூதலூரைச் சேர்ந்த ஜீவகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பாதிக்கப்படும் விவசாயிகள்:
அதில், "தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், போக்குவரத்துக்காக ரயில் சேவைகளையே நம்பி உள்ளனர்.
மேலும், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் போக்குவரத்துக்காக ரயிலை நம்பியுள்ளனர்.
தற்போது ரயிலை முன்பதிவு ரயில்களாக மாற்றவும், முன்பதிவில்லாத பெட்டிகளை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது. இதனால், திருச்சி முதல் மயிலாடுதுறை வரை செல்லும் 22 பயணிகள் ரயிலை ரத்து செய்துள்ளனர்.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால் ரயில் சேவையை மட்டுமே நம்பியுள்ள டெல்டா மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிரமத்திற்குள்ளாவர்.
ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே திருச்சி முதல் மயிலாடுதுறை வரையிலான 22 பயணிகள் ரயிலையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி ஆகியோரது அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தென்னக ரயில்வே நிர்வாகம் தரப்பில், தற்போது 1 பயணிகள் ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நீலகிரி மலை ரயில் சேவை 122 ஆண்டுகள் நிறைவு