மதுரை மகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "2016ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீக் காயத்திற்கு என்று தனி பிரிவு மற்றும் தோல் சேமிப்பு வங்கியுடன் மத்திய அரசுடன் சேர்ந்து உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி 60 சதவீத பண உதவி மத்திய அரசும் 40 சதவீத பண உதவி மாநில அரசும் தீக்காய தனிப்பிரிவு மற்றும் தோல் வங்கி அமைப்பதற்கு ரூ.6.579 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி முதல் கட்டமாக டிசம்பர் 2020ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.2.079 கோடி மாநில அரசு ரூ1.386 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்தியாவில் 12 இடங்களில் தோல் சேகரிப்பு வங்கி உள்ளது. இந்தியாவில் 134 கோடி மக்கள் உள்ளனர். இதில், 70 லட்சம் பேர் தீ காயங்களால் பாதிப்படைந்துள்ளனர்.
தோல் சேகரிப்பு வங்கியில் சேகரிக்கப்படும் தோல்கள் 5 வருடம் வரை பதப்படுத்தப்படுகிறது. தீக் காயங்கள் ஏற்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த தோல்கள் உதவுகின்றது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தோல் சேகரிப்பு வங்கிகாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டரை வருடங்களாகியும் இந்தத்துறை தற்போது வரை உருவாக்கப்படவில்லை. மேலும் மதுரை மாவட்டத்தில் தீக் காயங்களுக்கு எனத் தனிப்பிரிவு மற்றும் தோல் சேகரிப்பு வங்கி உருவாக்கப்படுவதன் மூலம் மதுரையை சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்படும் தீக்காய தனிப் பிரிவு முழுமையான நவீன வசதியுடன் உருவாக்கப்பட வேண்டும். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை போல் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் முறை பின்பற்றப்பட வேண்டும் இதன் மூலம் தோல், எலும்பு, இதயம், ரத்தம் ஆகியவை சேகரித்து முறையாக பாதுகாக்க முடியும்.
இது குறித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே மதுரை மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் முறையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டியும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீ தனிப்பிரிவு உடன் தோல் வங்கி நவீன வசதிகளுடன் தொடங்க கால நிர்ணயம் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியும், தோல் வங்கி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தோல் வங்கி தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவது குறித்தும் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...சீர்காழி நகை கொள்ளை: என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை