மதுரை: தனியார் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் குறித்து அரசு கண்காணிக்கிறதா என்று கேள்வியெழுப்பி, அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “உலகளவில் கரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். பலர் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் உயிரிழக்கும் அவலமும் நடந்தேறிவருகிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் எவ்வித சுகாதாரமும் இன்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது
இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமுள்ளது. பலர் அரசு மருத்துவமனைகளில் இருந்து தப்பிச்சென்று, வெளியே பொதுமக்களுக்கு கரோனா பரப்பி வருகின்றனர். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் இதனை காரணம் காட்டி மிக அதிக அளவில் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூல் செய்வதையும், சிகிச்சை அளிப்பதையும் சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இதற்காக பறக்கும் படை போன்றவை அமைத்து, இவற்றை நெறிப்படுத்த வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை செயல்படவிடாமல் தடை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிக்க கடுமையான நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குழுவில் யார் யார் இடம் பெற்றுள்ளனர். எத்தனை மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும், தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை விவரங்கள், கட்டண விவரங்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.