மத்திய அரசு 2015ஆம் ஆண்டோடு நிறுத்தி வைத்துள்ள நிதியின் காரணமாய் தேசத்தந்தை மகாத்மாவால் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் ஹரிஜன சேவா சங்கத்திற்குச் சொந்தமான பள்ளிகளும், மாணவர் விடுதிகளும் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் பட்டியலின மாணவ, மாணவியர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஹரிஜன சேவா சங்க பள்ளிகள் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக காந்தியடிகளால் கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் நாடு முழுவதும் 26 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. 1939ஆம் ஆண்டு வைத்தியநாதய்யரைத் தலைவராகக் கொண்டு ஹரிஜன சேவா சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்டது.
இச்சங்கத்தின் கீழ் மதுரையிலும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூரிலும் உண்டுஉறைவிடப் பள்ளிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டன. இப்பள்ளிகளின் வாயிலாக பட்டியலினத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவ, மாணவியர் கல்வி கற்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் நிதியுதவி இல்லாத காரணத்தால் இவ்விரண்டு பள்ளிகளில் பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரிஜன சேவா சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் இரா.சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், 'மிகப் பெரும் வரலாற்றுத் தேவையின் பொருட்டும், பட்டியலின மக்களின் சமூகநீதியைக் கருத்திற் கொண்டும் நமது தேசப்பிதாவால் ஹரிஜன சேவா சங்கம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அப்போது மதுரையின் புகழ் பெற்ற காங்கிரஸ்காரராக இருந்த என்எம்ஆர் சுப்பராமன், தன்னுடைய மாளிகையைத் தானமாக வழங்கினார்.
சமூகத்தின் அடித்தட்டில் உழலும் மக்களின் குழந்தைகள் கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இச்சங்கம் செயல்படத் தொடங்கியது. 'நந்தனார் விடுதி' என்ற பெயரிலான இந்தக் கட்டடம் நா.ம.ரா.சுப்பராமன் நினைவு உண்டுஉறைவிட ஆரம்பப் பள்ளி எனும் பெயரில் இதுவரை நிதி குறைபாடின்றி இயங்கி வந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசின் நிதியின்மை காரணமாக, இங்குப் பயிலும் 125 மாணவ, மாணவியர் பாதிக்கப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. இந்தப் பள்ளிக்காவது தமிழ்நாடு அரசின் உதவி ஓரளவிற்கு உள்ளது. ஆனால் திருக்கோவிலூரில் செயல்படும் ஹரிஜன சேவா சங்க பள்ளிக்கு மத்திய அரசின் நிதி மட்டுமே ஆதாரமாக இருந்து வரும் நிலையில், அப்பள்ளியின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நாடு முழுவதும் இதே நிலைதான். ஹரிஜன சேவா சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் சங்கர் குமார் தன்யால், தான் கொல்கத்தாவில் நடத்தி வந்த இது போன்ற பள்ளியை நிதியின்மை காரணமாக மூடிவிட்டார். தற்போது அதனை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், திருக்கோவிலூர் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அச்சமயம் நாங்கள் அவரிடம் கோரிக்கை எழுப்பியிருந்தோம். உரிய அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். நாடு முழுவதும் ஹரிஜன சேவா சங்க பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்கால நலன் கருதி மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். அவர்களின் படிப்பு தடைப்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்' என்றார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்கின்ற குழந்தைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுகின்ற பொறுப்பிலுள்ள மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களின் கடமையைத் தட்டிக் கழிப்பது எந்தவகையிலும் நியாயமல்ல... தேசப்பிதா காந்தியின் கனவும் இதனோடு சேர்ந்தேயிருக்கிறது என்பதை நாம் சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை...