மதுரை:சென்னையைச் சேர்ந்த இளைஞர் பாண்டுரங்கன், ரயில்வே பணிகளில் தமிழ்நாடு இளைஞர்கள் பெருமளவில் சேர வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஐடிஐ-களில் மாணவர்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு கடந்த ஜூன் மாதம் நேர்காணல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை சோளிங்கரில் வருகின்ற 12-ஆம் தேதி பாண்டுரங்கனுக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தனது அழைப்பிதழை மிக வித்தியாசமான முறையில் ரயில் டிக்கெட் வடிவில் அச்சடித்து அசத்தியுள்ளார். மேலும் அந்த அழைப்பிதழில் தனது திருமணப் பரிசாக நூறு ஏழை மாணவர்களை எனக்கு பரிசாகத் தாருங்கள். அவர்கள் அனைவரும் ரயில்வே பணிகளைப் பெறுவதற்கு உரிய பயிற்சிகளை அளிக்கிறேன் என அதில் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து தொலைப்பேசி வழியாக பாண்டுரங்கன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில், 'ரயில்வே பணிகளில் தமிழ்நாடு மாணவர்களின் சேருவது குறைவாக உள்ளது. அதற்குக் காரணம் ரயில்வே பணிகளுக்கான தேர்வு குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள ஐடிஐ-களில் பயிலும் மாணவர்களுக்கு இதுகுறித்து இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
எனது திருமணத்திற்கு வருகின்ற நண்பர்கள், உறவுகளுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவே நூறு ஏழை மாணவர்களை அறிமுகப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் இலவச பயிற்சி அளித்து ரயில்வே பணிகளில் உறுதியாக சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார். தன்னுடைய திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சடித்ததுடன், சமூக நோக்கோடு ஏழை மாணவர்களுக்கு உதவும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளையும் வடமாநிலத்தவர்கள் கைப்பற்றக்காரணம் என்ன? விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்