மதுரை: தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தென் மண்டல காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கடந்த 3 மாதங்களில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அக்குற்றவாளிகளின் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களான 31 வீடுகள், 19 மனைகள், நிலங்கள் மற்றும் 5 கடைகள் மேலும் 8 வாகனங்கள் மற்றும் 18 வங்கி கணக்குகளையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை சட்ட முறைப்படி முடக்கம் செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதில், தற்போது தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973-ன் படி நன்னடைத்தைக்கான பிணையம் பெறப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகளை கண்டறிந்து, அவ்வாறு கண்டறியப்பட்ட குற்றவாளிகளில் 1,000 நபர்களிடம் நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.
(மதுரை-142, விருதுநகர்-81, திண்டுக்கல்-186, தேனி-271, இராமநாதபுரம்-87, சிவகங்கை-30, திருநெல்வேலி-43, தென்காசி-32, தூத்துக்குடி-104, கன்னியாகுமாரி-24). மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், பிணையப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கட்டத்திற்குள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுவாராயின், அக்குற்றவாளிகள் பிணையப்பத்திர விதிமுறைகளை மீறப்பட்டதாக கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Video: திருவள்ளூர் மாணவியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்