'இன்னொரு மனிதன் இருக்கும்வரை இங்கு யாரும் அநாதை இல்லை' என்னும் புகழ்பெற்ற வாசகத்தை மெய்ப்பித்துக் காட்டும் வகையில், மதுரை அருகே 'திருநகர்ப் பக்கம்' என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆதரவற்ற முதியோர்களுக்காக 'அடைக்கலம்' என்ற இலவச இல்லத்தை உருவாக்கி மனிதநேய சேவை ஆற்றிவருகின்றனர்.
மரங்கள், நீர்நிலைகள், விலங்குகள் உள்ளிட்டவற்றைக் காக்கும்பொருட்டு களத்தில் இறங்கி பல்லாண்டுகளாகச் சேவை புரிந்துவரும் 'திருநகர்ப் பக்கம்' குழுவினர் ஆதரவற்ற முதியோருக்காகவும் கசிந்துருகி, காலமறிந்து சேவையாற்ற முன்வந்துள்ளனர்.
கடந்துசெல்ல மனமில்லை
"கரோனா கால பேரிடர்களில் ஒன்றுதான், முதியோர்கள் கைவிடப்படுதலும்... எங்களின் கண் முன்னே நடைபெறும் இப்படியொரு துயரச் சம்பவத்தை அப்படியே கடந்துசெல்ல மனமில்லை.
ஆகையால் காலம் எங்கக்கிட்ட இட்ட கட்டளையாக எண்ணித்தான் ஆதரவற்ற முதியோரைக் காக்கும் பணியில் சற்றும் முன்யோசனையின்றி களத்தில் இறங்கினோம்" என்கிறார் ராஜேஷ் கண்ணன்.
அழகான வீடு, சுற்றிலும் மரம் செடி கொடிகளுடன், காற்றோட்டம் மிகுந்த சூழல், பாரபட்சமற்ற ஆரோக்கியமான உணவு. 24 மணி நேரமும் செவிலியர். அழைத்த நொடியில் வந்துசெல்லும் அரசு மருத்துவர் பாண்டி என காசு கொடுத்துச் சேர்ந்தாலும் கிடைக்காத முதியோர் இல்ல வசதிகள்.
கண்கலங்க விடுவதில்லை
கவலைகளை மறந்து கதை பேசி மகிழ்கிறார்கள். பாட்டுப்பாடி குதூகலிக்கிறார்கள்... 'பெத்த புள்ளைங்க விட்டுட்டாங்க... ஆனா, இந்தப் புள்ளைங்க எங்கள கண் கலங்க விடுறதில்ல' என்று அவர்கள் சொல்லும்போது நம் கண்ணில்கூட கண்ணீர் பெருகுகிறது.
திருநகர், சுந்தர் நகர் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் நாகராஜன் கூறுகையில், "இந்தப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் வணிக நோக்கில் செயல்படுகின்றன.
ஆனால் அவர்களுக்கு மத்தியில், 'திருநகர்ப் பக்கம்' இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'அடைக்கலம்' முதியோர் இல்லம் மிகச் சிறப்பு வாய்ந்ததுதான். மிக அதிக செலவு பிடிக்கக்கூடிய இந்தச் சேவையைச் செய்ய முன் வந்ததற்காகப் பாராட்டினாலும், ஊர் கூடித் தேரிழுத்தால்தான் தொடர்ந்து இந்த அறப்பணியை அவர்களால் சிறப்புடன் செய்ய முடியும் என்பது எனது கருத்து" என்கிறார்.
இளைஞர்களின் குடும்பங்களும் ஒத்துழைப்பு
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே, ஆதரவற்ற முதிய தம்பதியர் தற்கொலை எண்ணத்தோடு வந்துள்ளார்கள், என்ற தகவல் கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவர்களை மீட்டு, பார்வையற்ற பெண்ணையும், காசநோயால் பாதிக்கப்பட்ட அவரது கணவரையும் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் மருத்துவம் பார்த்து பராமரிக்கிறார்கள்.
இல்லத்தைப் பராமரிக்க ஷிஃப்ட் முறையில் இந்த இளைஞர்களும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் பணிசெய்கிறார்கள். அடைக்கலம் இல்லத்தில் தற்போது 15-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி, தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தில், உணவின்றி கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களயும், சாலையோரவாசிகளையும் தேடிச் சென்று உணவு வழங்கிவருகின்றனர்.
கைக்கொடுக்கும் நன்கொடையாளர்கள்
விஷ்வா கூறுகையில், "திருநகர்ப் பக்கம், நீர் வனம், ஊர்வனம் என்ற அமைப்புகளின் மூலமாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளில் நாங்கள் அக்கறை காட்டிவந்தோம். உறவுகளின் கைவிடப்படும் முதியோர்களுக்காக 'அடைக்கலம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் அளித்து வருகின்ற நல்லாதரவும், ஊக்கமும்தான் இதற்கு முக்கியக் காரணம்.
எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்" என்கிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் முகம் தெரியாத நபர்கள் நன்கொடை மூலமாக உணவு வழங்குகிறார்கள்.
அவ்வாறு நன்கொடை இல்லாத நேரங்களில் 'திருநகர்ப் பக்கம்' இளைஞர்கள் தாங்களே ஒருங்கிணைந்து அதனை ஈடுகட்டுகிறார்கள். நாளொன்றுக்கு சராசரியாக மூன்றாயிரம் ரூபாயும், மாதமொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையும் முதியோர்களின் நலனுக்காகச் செலவிடுகிறார்கள்.
முதிய பறவைகளுக்கு ஓர் சரணாலயம்
மற்றொரு உறுப்பினர் நிலா பாண்டியன் கூறுகையில், "இங்கு வந்துள்ள முதியோர்கள் அவர்களின் பெற்றோர்களால் எவ்வாறு கவனிக்கப்பட்டார்களோ, அதேபோன்று அவர்களை எங்களின் குழந்தைகளாகவே நாங்கள் பேணுகிறோம். உணவு, மருத்துவச் சேவைகளில் ஒருபோதும் குறை வைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்கிறார்.
நிராதரவாய் வந்து சேர்ந்த முதிய பறவைகளுக்கு அடைக்கலம் தந்து சரணாலயமாய் அடைகாக்கும் இந்த இளைஞர்கள், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் என யாவும் பிரதிபலன் பாராமல் வழங்கி மகிழ்கின்றனர். அநாதையென்று யாருமில்லை என்ற நிலையை உருவாக்கி, சிறிய இல்லத்தைப் பேரில்லமாக்க வேண்டும் என்பதையே தங்களின் கனவாகவும் இலக்காகவும் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்