மதுரை டவுன்ஹால் சாலை பெருமாள் தெப்பக்குளம் அருகே மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு (பிப். 24) 10.45 மணிக்கு திடீரென ஒரு கடையின் பின் பகுதியில் தீப்பற்றியுள்ளது. பின்னர் தீ அடுத்தடுத்துள்ள கடைகளிலும் பரவி, மொத்தம் 16 கடைகளில் தீப்பற்றி எரிந்தது. இதில் 50 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் எரிந்து நாசமாகின. இதனைத் தொடர்ந்து புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக டவுன் தீயணைப்புத் துறையினர், மீட்புக்குழுவினர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் வந்து மூன்று மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
மேலும், தீ விபத்து வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடந்திருப்பதால், இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், தீ விபத்து ஏற்பட்ட கடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மின்னணு கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து திடீர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...மீனவர்களுடன் கடலில் குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி