மதுரை: பேரையூர் பேரூராட்சியின் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சலுப்பபட்டி கிராமத்தின் ஒரு தோட்டத்தில் இளங்கோ என்பவர் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவலின்பேரில், சாப்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தைச் சோதனை செய்தபோது அங்கு 11 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள், அவற்றினைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்கள், அச்சடிக்கும் இயந்திரங்கள், மை போன்ற பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், மேற்படி பொருள்களைக் கைப்பற்றிய காவல் துறையினர் மேற்படி அந்த இடத்திற்குச் சொந்தக்காரரான பாண்டி என்பவரை விசாரிக்க, அவர் தானும் இறந்துபோன இளங்கோவும் சேர்ந்து கள்ள நோட்டு அச்சு அடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
காவல் துறை விசாரணை
மேலும், இவ்வழக்கு தொடர்பாகப் பாண்டியைக் கைதுசெய்து காவல் நிலைய அலுவலர்கள் விசாரணை செய்துவருகிறார்கள். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் பேரையூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சரோஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அலுவலர்கள் ஆய்வு