மதுரை: திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். ஆகையால் இந்தக் கட்சிகளை நிராகரித்து தனித்துப் போட்டியிடும் நாம் தமிழருக்குதான் மக்கள் ஆதரவு என்று திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரான ரேவதி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பரபரப்பான பரப்புரைக்கு இடையில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி, நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தார் அப்போது அவர் பேசியதாவது:
"மருத்துவம், கல்வி, குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதுதான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம். அதனையே எங்களது முதன்மை வாக்குறுதியாக நாங்கள் வழங்கியுள்ளோம்.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தான் அரசுப் பள்ளிகள் இன்று நலிவடைந்து காணப்படுகின்றன. அவற்றில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்பாததற்கும் இதுவே காரணம். அதேபோன்று எளிய மக்களுக்கு தரமான மருத்துவம் என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதையும் மாற்றி சரி சமமான தரமான மருத்துவத்தை நாம் தமிழர் அரசே வழங்கும்.
நான் போட்டியிடுகின்ற திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் குடிநீர்ப் பிரச்சினை தலையாயதாக உள்ளது. ஒரு குடம் தண்ணீரை பதிமூன்று ரூபாய்க்கு மக்கள் வாங்கும் அவலநிலை உள்ளது. தொகுதியைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து உள்ளன.
ஆனால் அவற்றை தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக அரசு சரியான முறையில் தூர்வாரவில்லை. அதேபோன்று கூத்தியார்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முறையான சாக்கடை வசதி இல்லை. திருப்பரங்குன்றம் மலையை சுற்றிவரும் கிரிவலப்பாதையில் பொதுவான மின்விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை. தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் காரணமாக குடும்பத்திற்கு ஒருவர் குடிநோயாளியாக ஆக்கப்பட்டு உள்ளார். இதுதான் 50 ஆண்டுகால திராவிட அரசியலின் சாதனை.
முறையான மருத்துவ வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி தரையில் படுக்கும் அவல நிலை உள்ளது. உலகத்திலேயே சிறந்த மருத்துவம் தருகின்ற நாடு கியூபா. அதன் தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டு மருத்துவத்தை நாங்கள் மாற்றி காட்டுவோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தற்போது நாங்கள் அதிமுக, திமுக எனும் இரண்டு மலைகளுக்கு இடையே நின்று போராடுகிறோம். மலைகளைத் தகர்க்கும் கடப்பாரைகளாக நாங்கள் களத்தில் நிற்கிறோம். இந்த இரண்டு கூட்டணிகளையும் பெரிய கட்சி என்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் மட்டும் தான். காரணம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற ஒரே கட்சி நாங்கள். இன்றைக்கு மக்களிடம் எங்களுக்கான வரவேற்பு என்பது இந்த தனித்துப் போட்டியிடுதல் என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. நாங்கள் ஏந்தி வருகின்ற புலிக்கொடி ராஜராஜசோழனும் பிரபாகரனும் இணைந்த இந்தியக் கொடியாகும்.
தோழர் லீலாவதியை கொலை செய்த திமுகவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்கிறது. தன் கட்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு நீதி வாங்கித் தராத இவர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவது வேடிக்கையாக உள்ளது.
அதேபோன்று ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் கூட்டாளி திமுக. இந்தக் கட்சிகளை எல்லாம் வேரோடு புடுங்கி எறிவதற்குதான் நாம் தமிழர் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது.
எங்களுக்கு ஆட்சியும் அதிகாரமும் இல்லாதபோதே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கண்மாய், ஏரி, குளங்களை தூர்வாரி உள்ளோம். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாருவதே நாங்கள் வெற்றி பெற்றதும் செய்யக்கூடிய முதல் பணி. தண்ணீர் விலைகொடுத்து வாங்கும் நிலையை முற்றிலும் ஒழிப்போம். அடுத்தபடியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவோம்.
ரேஷனிலிருந்து தரக்கூடிய பொருட்களைக் கூட தரமாகத் தர இந்த ஆட்சியாளர்களுக்கு மனதில்லை. ரேஷன் கடை அரிசியை சமைத்து சாப்பிடுவது மிகக் கொடுமையான விஷயம். இது போன்ற விஷயங்களெல்லாம் ஆண்டவர்கள் மீதும் ஆள்கின்றவர்கள் மீதும் மக்களுக்கு எதிரான மன நிலையை தோற்றுவித்துள்ளது.
நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்பதை மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து எங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் மக்கள் எங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'சீரியல் பார்த்துட்டு ஜாலியா இருக்க தாமரைக்கு ஓட்டு போடுங்க’ - நடிகை நமீதா