கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு அம்ருத் விழாக்குழுவின் சார்பாக ஏராளமான விழிப்புணர்வு முகாம்கள், மாணவர்களுக்கான போட்டிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து விளக்கும் நிகழ்வுகள், போதைப்பொருள் தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி நண்பகல் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து விவேகானந்தா கேந்திரம் வரை இருசக்கர வாகன தேசியக்கொடி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். 100 தன்னார்வல கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுக்கு அனுமதி கோரி மனு அளித்த நிலையில் இதுவரை முறையாக அனுமதி வழங்கப்படவில்லை.
ஆகவே நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து விவேகானந்தா கேந்திரம் வரை இருசக்கர வாகன தேசியக்கொடி பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 49ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யூயூ லலித் நியமனம்!