மதுரை: தஞ்சாவூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராதா என்பவர் தனது பணியிடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் ஏழை, நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே விட்டது. ஆசிரியர் சமூகம் பெரும்பாலும் தங்களது தேவைகள், உரிமைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தேசத்தின் முதுகெலும்பான மாணவர்களை நல்ல முறையில் வழி நடத்த ஆசிரியர்கள் தவறுவது, நமது அரசியலமைப்பு பணியை முறையாக செய்யாததை போன்றதே. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாக கூட அரசு பள்ளிகளை உருவாக்க முடியாத நிலையே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் கூட்டமைப்புகள் துறை ரீதியான விஷயங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
மாவட்டம் தோறும் சிறப்பு குழு
இதனை தடுக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுயமாக தொழில் செய்வது, பகுதி நேர வேலைகள் செய்வது, டியூஷன் சென்டர் வைப்பது, வீடுகளில் டியூசன் எடுப்பது குறித்த தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்கள் அளிக்க தொலைபேசி, வாட்ஸ்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து மட்டுமே மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின்போது தயக்கம், சுணக்கம் காட்டும் ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மீதான புகார்களின் ஆவணங்களை சேகரித்து, அதில் சட்ட விரோத செயல்கள் கண்டறியப்பட்டால் அந்த சங்கங்கள், அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதிகளை நடைமுறைப்படுத்தி, இதுதொடர்பான அறிக்கையை தமிழ்நாடு முதன்மை செயலர் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சந்தேகத்திற்கு இடமாக இளம்பெண் இறப்பு குறித்த வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு