மதுரை விளாங்குடி அருகே பரவையை ஒட்டி அமைந்துள்ளது ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை வளாகம். இங்கிருந்து நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் விற்பனைக்குச் செல்கிறது. இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 5 மணி வரை மிகவும் பரபரப்பாக இயங்கும் வளாகம் இது.
தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலையடுத்து 144 தடை உத்தரவால் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மக்களின் சமூக இயக்கத்தைக் குறைப்பதற்காக காய்கறிகளை நேரடியாக வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் முறையை அமல்படுத்த மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் முயற்சி மேற்கொண்டார்.
பிற மாவட்டங்களில் ரூ.250க்கு காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்தபோது, அதைவிட விலை மலிவாக மதுரை பொதுமக்களுக்கு வெறும் ரூ.200க்கு 20 வகையான காய்கறிகளை விற்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
பொதுநோக்கம் கருதி லாபநோக்கமின்றி இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தவர்தான் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் மனுவேல் ஜெயராஜ். அவர் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "எங்களது சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் பேராதரவு காரணமாகத்தான் இம்முயற்சியை மேற்கொள்ள முடிந்தது. வெறும் 200 ரூபாய்க்கு நான்கு நாள்களுக்குப் போதுமானதாக 20 வகை காய்கறிகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறோம்" என்கிறார்.
மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வணிக வளாகத்தில், தொழிலாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்த வண்ணமிருக்கிறார்.மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசின் உயர் அலுவலர்களின் வேண்டுகோள் மட்டுமல்ல... கரோனா தொற்று வேகமாகப் பரவக்கூடிய இந்த நேரத்தில் தங்களின் பங்காக தாங்கள் செய்த சிறிய சேவையே இது என்று கூறுகிறார் மனுவேல் ஜெயராஜ்.
மூட்டை மூட்டையாக வந்திறங்கும் காய்கறிகளை, சங்க கட்டிடத்தின் உள்ளே பிரித்துக் கொட்டுகிறார்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் ஒருவரிலிருந்து இருவர் எடை போடுகிறார்கள். வரிசை வரிசையாகப் பை கொண்டு வரும் நபர்களிடம் அதனைக் கொட்டுகிறார்கள். அனைத்துக் காய்கறிகளையும் நிரப்பிய பையை நூல் கொண்டு கட்டி அடுக்குகிறார்கள். 60 பேர் இந்தப் பணியை இரவு தூங்காமல் சுறுசுறுப்பாக மேற்கொள்கின்றனர். 11 மணிக்குத் தொடங்கும் இந்தப் பணி அதிகாலை 5 மணியளவில் நிறைவடைகிறது.
மனுவேல் ஜெயராஜ் மேலும் கூறுகையில், "ரூ.200க்கு 20 காய்கறிகள் கொண்ட தொகுப்பும், ஏழை, எளிய மக்கள் வாங்குவதற்கு வசதியாக ரூ.100க்கு 14 காய்கறிகள் கொண்ட தொகுப்பையும் தயார் செய்கிறோம். காலையில் மாநகராட்சியிலிருந்து வந்து மொத்தமாக பெற்றுச் செல்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியபோது ஆயிரம் பைகளும், புதன்கிழமை 1150 பைகளும், வியாழக்கிழமை 2500 பைகளும் என நாளுக்குநாள் விற்பனை கூடிக் கொண்டே செல்கிறது. பொதுமக்கள் இந்தத் திட்டத்தை பெரிதும் வரவேற்கின்றனர்" என்கிறார்.
சங்கத்தின் துணைத் தலைவர் குரும்பன், பொருளாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன் ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. மிகப் பாதுகாப்பான வகையில் முகக்கவசம் அணிந்து கொண்டு பணி செய்கின்றனர். இதனை அவ்வப்போது நிர்வாகிகள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
"கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்களது சங்கத்தின் சார்பாக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை இங்கிருந்து அனுப்பினோம். பொதுமக்கள் பாதிக்கப்படும் வேளைகளில், பொது நோக்கத்தோடு சங்கம் செயல்படுகிறது. அதைப்போன்றே தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மதுரை மக்கள் மீள்வதற்கு எங்களால் இயன்ற சிறு சேவை இதுவாகும். இதில் எந்த ஒரு லாபநோக்கமும் கிடையாது. இது எங்களின் சமூகக் கடமை" என்கிறார் மனுவேல் ஜெயராஜ்.
பேரிடர் காலங்களில் மக்களின் மனிதநேயம் ஏதாவதொரு வகையில் வெளிப்படத்தான் செய்கிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தற்போதைய பணி பாராட்டிற்குரியது.