மதுரை: MGNREGA: இந்திய நாட்டின் வறுமையை அகற்றும் வண்ணம் கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.
இதன்மூலம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலையை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்வதுடன், குறைந்தபட்ச கூலி உத்தரவாதத்தையும் இந்தத் திட்டம் வழங்கியிருந்தது.
அதன் அடிப்படையில் இத்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்தரவாதம் கிடைத்தது.
வேலையும் இல்லை; ஊதியமும் இல்லை
இந்நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள அலங்கம்பட்டி கிராம பொதுமக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மிகக் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலங்கம்பட்டியைச் சேர்ந்த அடைக்கம்மாள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாள்கள் மட்டுமே எங்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த வருமானத்தைக் கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது. அலுவலர்களிடம், ஊராட்சித் தலைவரிடம் இதுகுறித்து பலமுறை முறையீடு செய்த பின்னரும் இந்த நிலையே நீடிக்கிறது.
அதேபோன்று ஒதுக்கீடு செய்த வேலை நாள்களிலும்கூட நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் கிடைக்கப்பெறவில்லை. இதுவரை ரூ.100-க்கும் குறைவாகவே நாங்கள் பெற்றுள்ளோம்" என்றார்.
800-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி கூறுகையில், 'ஜூலை மாதம் எங்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்தார்கள் என்றால், மீண்டும் அடுத்த வேலை அடுத்த ஆண்டு ஜூலையில்தான் கிடைக்கிறது.
இதனைத் தவிர்த்துவிட்டு, வாரம் இத்தனை நாட்கள் என்று வேலையை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். நூறு நாள் வேலைக்கு என நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை அலுவலர்கள் தருவதில்லை.
வெறும் நூறு ரூபாயைக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த ஊரில் மட்டும் சற்றே ஏறக்குறைய 800 பேருக்கு நூறு நாள் வேலைத்திட்ட அட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் அனைவருமே சராசரியாக 10இல் இருந்து 15 நாள்கள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த அட்டையிலும் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் உறுதிமொழியும், நிதர்சனமும்
மற்றொரு பெண் லட்சுமி கூறுகையில், "கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூலியாக ரூ. 300 வழங்கப்படும் என்று உறுதி கூறியிருந்தார். ஆனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலியே கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனையாக உள்ளது.
அதேபோன்று நூறு நாள் வேலைத்திட்டத்தைக் கண்காணிக்கும் பணியாளர்களை அவ்வப்போது மாற்ற வேண்டும், அவ்வாறு மாற்றுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே பணியாளரே இங்கு பொறுப்பிலிருந்து வருகிறார். அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது" என்கிறார்.
நூறுநாள் வேலைத் திட்டத்திற்கான உள்ளூர் பொறுப்பாளர் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு மாற்றம் செய்யப்படாத காரணத்தால், அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி ஒதுக்கும் நிலை உள்ளதாக, அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர்.
150 லட்சியம்; 15 தான் நிச்சயம்
இதுகுறித்து, கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் கூறுகையில், "இந்தத் திட்டம் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
நாளடைவில், இதன் பயன் முழுமையாக மக்களைச் சென்றடையாத நிலை உள்ளது. கம்பூர் ஊராட்சியில் மட்டும் ஏழு கிராமங்கள் உள்ளன.
நூறு நாள் என்பதை தற்போது 150 நாளாக மாற்றம் செய்துள்ளனர். ஆனாலும், இங்குள்ள மக்களுக்கு 10 அல்லது 15 நாள்கள் வேலை கிடைப்பதே மிக அபூர்வமாக உள்ளது. பல்வேறு கிராம சபைகளில் இதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டும்கூட அலுவலர்களால் இப்பிரச்சனை கண்டுகொள்ளப்படவில்லை.
அதேபோன்று நிர்ணயிக்கப்பட்ட ரூ. 273 என்ற ஊதியத்தில், ரூ. 100 அல்லது ரூ.130 என்ற அளவில்தான் இந்த மக்களுக்கு வழங்கப்படுகிறது.
கொட்டாம்பட்டி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். விவசாயம் தொடர்ச்சியாகக் கிடையாது. இந்த மக்களின் வேலைவாய்ப்பு என்பது நூறு நாள் வேலையைப் பொறுத்தே இருக்கிறது.
மழையால் தள்ளிப்போன வேலைவாய்ப்பு
இந்தத் திட்டத்தின் நோக்கத்தை இப்பகுதி மக்கள் முழுமையாகப் பெறவில்லை என்பதுதான் மிகக் கசப்பான உண்மை. தங்கள் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற வேதனை இப்பகுதி மக்களிடம் உள்ளது" என்கிறார்.
நாம் இதுகுறித்து, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இப்பகுதியில் ஒரு சில கிராமங்களில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்தவுடன் திட்ட இயக்குநர் உடனடியாக அந்த மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அதனை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். மேலும் தொடர் மழை காரணமாக, அந்த மக்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பை வழங்க இயலவில்லை. அதுமட்டுமன்றி, இந்த நிதியாண்டிற்குள் அவர்களுக்குரிய 100 வேலை நாட்கள் நிச்சயமாக வழங்கப்படும்.
விடியல் அளிக்குமா அரசு...?
மேலும், நூறு நாள் பணியின்போது ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்படும் வேலையை சரியாக செய்யவில்லையென்றால், கூலி அந்த வேலைக்கேற்றார்போல் குறைத்து வழங்கப்படுவது வழக்கம். ஆகையால், அதன் பொருட்டு அவர்களுக்கு கூலி குறைக்கப்பட்டிருக்கும்.
இதனையும் கண்காணித்து அந்த மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்றனர்.
வறுமையை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வேலை உறுதித் திட்டம், ஏழை மக்களுக்கான வரப்பிரசாதம். அதிலுள்ள குறைகளைக் களைந்து மக்களுக்கு தொடர்ந்த வேலைவாய்ப்பையும், அதற்குரிய கூலியையும் வழங்குவது அரசின் கடமை.
அந்த அடிப்படையில் கலங்கி நிற்கும் அலங்கம்பட்டி மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள அனைத்துக் கிராம மக்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.