மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதி என்பது பொதுமக்களை சந்திக்கும் போது தெரிகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் அலுவலர்களின் உதவியுடன் வாக்களார்களுக்கு பணம் விநியோகம் தாராளமாக நடைபெற்றுவருகிறது.
பாஜக தேர்தல் அறிக்கையில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்கள், ஆன்றோர் சான்றோர் கையில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான வரையறை என்ன என்பது சர்ச்சைக்குரியது. கோயில்களில் இருக்கும் பழங்காலத்து, ஆபரணங்கள், வரலாற்றுச் சான்றுகளை தனியாருக்கு வழங்கும் முயற்சியாகவே இது உள்ளது.
மக்களின் வழிபாட்டு உரிமைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என அனைத்தையும் தனியார் மயமாக்கி வரும் மோடி அரசாங்கம், அந்த பட்டியலில் தற்போது கோயில்களையும் சேர்த்துள்ளனர். மதசார்ப்பற்ற கூட்டணி இவற்றை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கான ஆட்சியை வழங்கும்.
மக்களின் கோபத்தை எதிரொலிக்கும் என்று தெரியாமலேயே ஆண்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசம் என்ற விளம்பரத்தை செய்துவருகின்றனர் அதிமுகவினர். பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க சென்ற துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அந்த தொகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் பணத்தை கொடுத்து இதனை சரி செய்துவிடலாம் என எண்ணுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய மாநில குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், "வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது .
தபால் வாக்குகள் நடைமுறை என்பது அரசு ஊழியர்களுக்கு என்கிறபோது, தற்போது மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு என விரிவுபடுத்தினால் அதில் முறைகேடுகள் நடைபெற வழி வகுக்கும். கட்டாயத்தின் பேரில் அவர்களை தபால்வாக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது" என்று கூறினார்.