இது தொடர்பாக மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், "கரோனோ காலத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். பல மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உள்ளது.
இந்நிலையில், பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான மத்திய, மாநில கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பாக கிராமங்கள், ஊரகப் பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டலின் படி, உரிய முறையில் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அது தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இது தொடர்பாக இருவிதமான தரவுகள் கிடைக்கப்பெற்றது எப்படி? என்பது குறித்தும், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ’சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைனில் நடைபெறும்’