மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வாசுதேவா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், “நடப்பு 2020-2021 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. அத்துடன், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது 2020- 2021ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்காக நீட் தேர்வு முடிந்து அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அவற்றுக்கான கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கலந்தாய்வுப் பட்டியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கவில்லை, இது ஏற்கத்தகதல்ல. நடைபெற்றுவரும் கலந்தாய்வில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் பட்டியலில் சேர்த்தால், மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கும். இதனால் பல மாணவர்கள் பயனடைவார்கள். தற்போது நிவர் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே 2020-2021 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள்," தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜயநாராயணன்," 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அடுத்த கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை னடைபெறும்" என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது. தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளை போல மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும் என்பதால், காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளிக்க வேண்டாம்” என அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க : பொதிகையில் சமஸ்கிருதமா? திருமாவளவன் சீற்றம்!