மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த மாதவன், மாரிமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அதில், "மதுரை மேலூர் அருகே உள்ள கீழையூர் கிராமம் வழியாக 12ஆவது பெரியார் வைகை கால்வாய் மதகு உள்ளது. இங்கு உள்ள மதகுகள் வழியாக பத்துக்கு மேற்பட்ட கிளை கால்வாய்கள் மூலம் பல ஏக்கர் வேளாண் நிலத்திற்குத் தண்ணீர் செல்கிறது.
இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக கீழையூர் பகுதியில் அமைந்துள்ள 12ஆவது பெரியார் வைகை கால்வாய் மதகை இடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மேலூர் அருகே உள்ள கீழையூர் 12ஆவது பெரியார் வைகை கால்வாய் மதகை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இப்பகுதி விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 12ஆவது பெரியார் வைகை கால்வாய் மதகுகளை இடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மதகு இடிப்பதற்கு முன்பாக தண்ணீர் செல்வதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கூறப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, 12ஆவது பெரியார் வைகை கால்வாயினை இடிக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
கால்வாய் இடிப்பதற்கு முன்பாக தண்ணீர் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பை அக்டோபர் 7ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.