மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் வைரஸ் தொற்று பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று மேலும் ஒரு மாணவருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக கல்லூரியில் பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையில் மீண்டும் ஒரு மாணவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் அதே மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் 3 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வைரஸ் தொற்று பரவியதால் மாணவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் உடனடியாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கல்லூரியை மூட வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மலை அளவு உயர்ந்த மதுரை மல்லியின் விலை!