தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதிகளையும் பெற்று தொடங்கப்பட்டது.
மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்பட தடைவிதித்தது. மேலும், தமிழ்நாடு அரசாணை 72இன்படி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.
மேலும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அவசரகால பணிகள்கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே திராவகம், ரசாயனம் உள்பட பல மூலப்பொருள்கள் இருந்துவருகின்றன. அவசர கால தேவைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக்கோரி மனு அளித்தும் அவை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள மூலப்பொருள்களை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு அரசாணை எண் 83இன்படி உள்ளூர் உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையின்போது 2132.64 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன், 7,833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை உற்பத்திசெய்யப்பட்டன. இதற்காக உள்ளூர் உயர்மட்டக்குழு அனுமதிபெற்று 250 ஊழியர்கள் பணியாற்றினர்.
தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை வெளியேற்றவும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களைச் சரிசெய்யவும் உள்ளூர் உயர்மட்டக்குழு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருள்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் தொழிற்சாலையில் முன்பிருந்த மூலப்பொருள்கள், பொருள்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியே கொண்டுவரவும் அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைச்சாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மூலப்பொருள்கள் தொழிற்சாலையின் உள்ளே உள்ளன. அதனை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் இது தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில், அவ்வாறு எந்த ஒரு வழக்கும் தாக்கல்செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டல விவகாரம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு'