தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டம், தாய்த் திட்டம், அரசாணை எண் 50 ஆகியவற்றின் கீழ் நடைபெற்ற நீர்நிலை பராமரிப்புப் பணிகள், குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு பொன்காந்தி மதிநாதன் பரமசிவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "தமிழ்நாட்டின் நீர்நிலைகளை பராமரித்து பாதுகாப்பதற்காக குடிமராமத்து திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தந்த பகுதி விவசாயிகள், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலமாகவே குடிமராமத்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தப்படாத காரணத்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 7 நபர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு குடிமராமத்து பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அந்த நபர்கள் அரசியல்வாதிகளோடு தொடர்புகொண்டு முறைகேடு செய்பவர்களாகவே இருந்துள்ளனர்.
மேலும், நீர்நிலை குடிமராமத்து திட்டம், தாய் திட்டம் மற்றும் அரசாணை எண் 50 ஆகிய மூன்று திட்டங்களின் கீழும் பராமரிப்பதாகக் கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நீர்நிலை முறையாக தூர் வாரப்படுவதில்லை.
எனவே, இதனை சரிசெய்ய நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட வேண்டும். அத்துடன், தூத்துக்குடி - விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்களில் குடிமராமத்து திட்டம், தாய்த் திட்டம், அரசாணை எண் 50 ஆகியவற்றின் கீழ் நடைபெற்ற நீர்நிலைகள் பராமரிப்புப் பணி குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று(டிச.21) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், "நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட இயலாது. மேலும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு உள்துறை செயலர், வருவாய் துறை செயலர், பொதுப்பணித் துறை செயலர், கனிமவளத் துறை ஆணையர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : மக்கள் நீதி மய்யம் கட்சி பிரச்சாரம்: மக்கள் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன்