திருச்செந்தூரைச் சேர்ந்த நாகமணி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேர்த்திக்கடனாக மொட்டை போடும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சந்தனம் விற்பனைசெய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சந்தன விற்பனைக்கான ஏலம் எடுத்தவர்கள் சாதாரண நாள்களில் 10 ரூபாய்க்கும், விழா நாள்களில் 20 ரூபாய்க்கும் விற்பனைசெய்து வருகின்றனர்.
ஏல நிபந்தனைகளை மீறி தனியாக விற்பனை கவுண்டர் அமைத்து, அனைத்து பக்தர்களிடமும் கட்டாயப்படுத்தி சந்தனம் விற்பனைசெய்வதாகவும், அதுவும் கோயில் பெயரில் போலியாக நெகிழி டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த மனுவில், "சந்தன பவுடர் விற்பனை விலை குறிப்பிட்டிருக்கும் விலைப்பட்டியல் பலகையையும் சேதப்படுத்தியுள்ளார். விலைப்பலகையை சரிசெய்து புதிய விலைப்பலகை அமைக்க மூன்றாயிரம் ரூபாயை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலுத்தியும், கோயில் நிர்வாகம் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குத்தகைதாரர் தொடர்ந்து பக்தர்களிடம் அதிக விலைக்கு சந்தனத்தை, கோயில் தேவஸ்தான பிரசாதம் என்ற பெயரில் விற்பனை செய்துவருகிறார்" என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, "ஏல விதிமுறைகளை மீறிய குத்தகைதாரர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விற்பனை கவுண்டரை அகற்ற வேண்டும், சந்தன விற்பனை விலை குறித்த பலகை பக்தர்கள் பார்வையில் படுமாறு அமைத்து பக்தர்களுக்கு சந்தனம் ஒரு ரூபாய்க்கு கிடைப்பதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு, இது குறித்து தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: