மதுரை: திருச்செந்தூர் ஸ்ரீஜெயந்திநாதர் திரிசுதந்திரர் காரியஸ்தார் ஸ்தானிகர் சபா தலைவர் நாராயணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருச்செந்தூர் கோயில் வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிவிப்பாணையை அறநிலையத்துறை ஆணையர் கடந்த ஏப்ரல் 1இல் வெளியிட்டார். அதில், ’கைங்கர்யம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குற்ற வழக்கில் தண்டனை பெறவில்லை என உறுதி மொழியும் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை தாக்கல் செய்ய வேண்டும்.
இதை பரிசீலித்து தகுதியின்மை ஏதுமில்லை என்றால் நிபந்தனைக்கு உட்பட்டு அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டும், கைங்கர்யம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு 100 திரிசுதந்திரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திரிசுதந்திரர்கள் குறையைப்போக்கிட மாதம் ஒரு முறை குறைகேட்புக்கூட்டம் நடத்த வேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆண்டுதோறும் அடையாள அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், எங்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படும். எங்களது உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, அறநிலையத்துறை ஆணையரின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், சுவாமிநாதன், நிர்மல்குமார் அடங்கிய சிறப்பு அமர்வு, ‘‘திருச்செந்தூர் கோயிலுக்கு தினசரி பல்லாயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர். எந்தவித இடையூறும் இன்றி, அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். கோயிலுக்குள் எந்தவித விரும்பத்தகாத நிகழ்வும் நடக்கக் கூடாது. கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக அறநிலையத்துறை ஆணையர் பல்வேறு வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளார்.
ஆனால், இதற்காகப் பதிவு பெற்ற அமைப்பான திரிசுதந்திரர்களுக்கு எந்தவிதமான நோட்டீசோ, விளக்கமளிக்கவோ வாய்ப்பளிக்கவில்லை. தொழில்நுட்பக்காரணங்கள் அடிப்படையில் அவசர கதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரம் பக்தர்களின் நலனைக்கருத்தில் கொண்டு அறநிலையத்துறை விதியின் கீழ் தேவையான நடவடிக்கையை சுதந்திரமாக முடிவெடுக்க ஆணையருக்கு அதிகாரம் உண்டு. இதற்காக விதிகளைப் பின்பற்றி முறையாகப் புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்கலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு குறித்து வேளாண் துறை அலுவலர்களின் வழக்கு... செப்.26க்கு ஒத்திவைப்பு