மத்திய தலைமை நிதி தணிக்கைக் குழு ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேசங்களின் ஆண்டு வரவு-செலவுகளை ஆய்வுசெய்து அதனை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றிவருகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது மாநில, யூனியன் பிரதேசங்களின் வரவு-செலவுகளை இதில் காண முடியும்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு வாங்கிய பல்வேறு கடன்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 814.52 கோடி ரூபாயை வட்டியாக மட்டும் கட்டியுள்ள அதிர்ச்சித் தகவல் அதில் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் அனைத்தும் அனைவரும் அறியும் வண்ணம் https://cag.gov.in/en/state-accounts-report?defuat_state_id=88 என்ற இணையதள முகவரியில் கிடைக்கின்றது.
தமிழ்நாடு அரசு ஒவ்வொராண்டும் பல்வேறு கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையானது 2013-12ஆம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 30.53 கோடி ரூபாயிலிருந்து 2020-21 நிதியாண்டில் 278 விழுக்காடு உயர்ந்து 36 ஆயிரத்து 311.47 கோடி ரூபாயாக இருந்தது.
கரோனா தாக்கத்தால் நடப்பு நிதியாண்டில் கட்ட வேண்டிய வட்டியான 36 ஆயிரத்து 311.47 கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு அரசு நவம்பர் 2020 இறுதிவரை 14 ஆயிரத்து 181.51 கோடி ரூபாயை மட்டுமே கட்டியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள 22 ஆயிரத்து 129.96 கோடி ரூபாய் வட்டியை கட்ட வேண்டிய தேவையுள்ளது.
பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.2,500 வழங்க தமிழ்நாடு அரசு ஐந்தாயிரத்து 604.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அப்படி கணக்கீடு செய்தால் கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கட்டிய வட்டித் தொகையை கொண்டு மட்டும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 73 ஆயிரத்து 972 ரூபாய் வழங்க முடியும்.
தமிழ்நாடு அரசின் செலவுக் கணக்கில் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் முதலிடமும், அரசு பெற்ற கடனுக்கு வழங்கும் வட்டித் தொகை இரண்டாம் இடமும் பெறுகின்றது. 2019-20 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களுக்குச் செய்த செலவு 20 ஆயிரத்து 146.77 கோடி ரூபாய்.
ஆனால் அதே நிதியாண்டில் பல்வேறு கடன்களுக்குச் செலுத்திய வட்டித் தொகை 31 ஆயிரத்து 980.19 கோடி ரூபாய் ஆகும். பொதுமக்களுக்கு வழங்கிய மானிய திட்டங்களைவிட அதிக தொகையை வட்டியாகச் செலுத்தியுள்ளது.
இதையும் படிங்க...பிரதமர் மோடி முதலில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தயாநிதி