குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த 35 நாட்களாக மதுரை மகபூப் பாளையத்திலுள்ள ஜின்னா திடலில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தரப்பில் பல்வேறு வகையான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
இதற்கிடையே வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையிலான அமைதிக்குழு போராட்டக்காரர்களிடம் மார்ச் 18ஆம் தேதிவருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டம் தொடருமென அறிவித்தனர்.
இவ்வேளையில் நாடு முழுவதும் நோய்க் கிருமி பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிகமாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, திரையரங்குகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் பெரும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு அறிவுறுத்தியுள்ளன.
இதற்கிடையே மதுரை மகபூப் பாளையத்திலுள்ள ஜின்னா திடலில் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போராட்டக்காரர்கள் முடிவுசெய்து போராட்டத்தின் 36ஆம் நாளான இன்று மதுரை ரயில்வே நிலையத்தில் கிழக்குப்புற வாயில் வரை ஊர்வலமாக சென்று, பிறகு மீண்டும் ஜின்னா திடலை வந்தடைந்தது நன்றி அறிவித்ததோடு, தங்களது போராட்டத்தையும் நிறைவுசெய்தனர்.
போராட்டத்தின் முடிவில் ஒருங்கினைப்பாளர் நிஜாம் அலி கான் நோய்க் கிருமி பாதிப்பின் தீவிரம் குறைந்த பிறகு, இப்போராட்டம் மீண்டும் தொடரும் என நன்றியுரை கூட்டத்தில் தெரிவித்தார்.