மதுரை: சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டுவரும் எலும்பு வங்கி, தற்போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக அரசு 40 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
மருத்துவமனை விரிவாக்கக் கட்டிடத்தில் இது செயல்படவுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து எலும்புகள் பெறப்பட்டு, நவீனத் தொழில்நுட்ப அம்சங்களுடன் பதப்படுத்தப்பட்டு பாத்திரமாகப் பாதுகாக்கப்படவுள்ளன. இந்த எலும்புகள் , புற்றுநோய், எலும்பு முறிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு வழங்க இயலும்.
இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், 'கிருமித்தொற்று, புற்றுநோய், நேர்ச்சி ஆகியவை காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, அவற்றை முழுமையாக அகற்றி விட்டு, அதற்குப் பதில் உண்மையான எலும்பைப் பொருத்துவது, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
இயற்கையாக இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள், உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் ஆகியோரிடமிருந்து எலும்புகளைப் பெற்று, முறைப்படி பாதுகாத்து, எலும்பு மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக இந்த எலும்பு வங்கி செயல்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெறப்பட்ட எலும்பை ஆல்கஹாலில் கழுவிச் சுத்தப்படுத்தி, அதில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற கிருமிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு குளிர்சாதனப் பெட்டியில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் பல ஆண்டுகள் பாதுகாத்து வரலாம். எலும்புகளைக் காமா கதிர்கள் மூலம் தொற்று நீக்கம் செய்து பாதுகாப்பதும் உண்டு.
பொதுவாக இறந்தவரின் உடலிலிருந்து 12 மணி நேரத்துக்குள் எலும்பைப் பெற வேண்டும். உயிரோடு இருப்பவர் விபத்துக்கு ஆட்படும்போது சேதம் அடைந்த எலும்புகளையும் வங்கியில் சேமிக்க இயலும். அதாவது இடுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளும்போது, அங்கு உள்ள பந்துக்கிண்ண மூட்டு எலும்பைச் சேமித்து, அடுத்தவர்களுக்குப் பயன்படுத்த முடியும்.
இதேபோல முதுகெலும்பு அறுவைச் சிகிச்சையின்போது விலா எலும்புகளை வெட்டி எடுப்பது நடைமுறை. இந்த எலும்புகளையும் பாதுகாத்துப் பின்னாளில் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியும். நேர்ச்சியின் போது கை, கால்கள் துண்டாகி தசைகள் நசுங்கி விட்டால், அவற்றின் எலும்புகளை இந்த மாதிரி சேமித்துப் பயன்படுத்த முடியும்" எனத் தெரிவிக்கின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண் வங்கி, ரத்த வங்கி ஆகியவை ஏற்கெனவே இயங்கிவரும் நிலையில், எலும்பு வங்கியைத் தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் - மகராஷ்டிராவில் செயல்படுத்த திட்டம்