” அண்ணா பேருந்து நிலையம் அருகே எனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, தோள் பையுடன் வயதான ஒருவர் கையில் ஒற்றை செருப்புடன், சாலையில் விழுந்த மற்றொரு செருப்பை தேடிக் கொண்டிருந்தார். அருகே சென்று அவரது முகத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சியானது ” மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியராஜனின் இந்த தகவல், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் பெரும் பேசு பொருளானது.
பாண்டியராஜனை அப்படி அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த முதியவர் யார்? அதை பாண்டியராஜனே சொல்கிறார் நெகிழ்ச்சியோடு...” ஆட்டோவைத் திருப்பிக் கொண்டு அந்த முதியவர் அருகே நான் வருவதற்கும், சாலையில் கிடந்த மற்றொரு செருப்பைத் அவர் தேடி எடுப்பதற்கும் சரியாக இருந்தது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும்? என்று கேட்டேன். கருப்பாயூரணி அருகே உள்ள திருமண மண்டபத்தின் பெயரைச் சொல்லி அங்கே போக வேண்டும் என்றார்.
ஆனால், என்னிடம் 20 ரூபாய் மட்டும்தான் உள்ளது. ஆனால் நீங்கள் 25 ரூபாய் கேட்பீர்களே என்று சிரித்தபடி, என்னால் கொடுக்க இயலாது என்றார். நான், பரவாயில்லை... வாருங்கள்... அங்கேயே உங்களை இறக்கி விடுகிறேன் என்று கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றேன். இந்த இடைப்பட்ட பயண நேரத்தில் தான் யார் என்பதை, அவரும் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு தெரிந்ததாக நானும் அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை.
அவர் சேரவேண்டிய திருமண மண்டபத்தில் அவரை இறக்கிவிட்டபோது, நுழைவாயிலில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் காரில் இறங்கி எங்களைக் கடந்து சென்றார். அப்போது மண்டப செக்யூரிட்டி, என்னையும் அந்த முதியவரையும் கவுன்சிலர் கார் வரும் வழியில் நின்றதற்காக திட்டியவாறே விலகச் சொன்னார். நான் அவரிடம் போய், இவர் யார் என்பதை எடுத்துச் சொன்னேன். அப்போது கூட அவர், இதையெல்லாம் போய் ஏன் சொல்கிறீர்கள்? அவர் வேலையை அவர் பார்க்கிறார் விடுங்கள் என்றவாறே சென்றார் “ என்று தெரிவித்தார்.
நடு ரோட்டில் ஒற்றை செருப்புடன் இணை செருப்பை தேடிக்கொண்டிருந்த, ஆட்டோ ஓட்டுநர் பாண்டியராஜன் அழைத்துச் சென்ற, கையில் 20 ரூபாய் மட்டுமே பயண செலவிற்கு வைத்திருந்த அந்த வயதானவர் வேறுயாருமல்ல... மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் நன்மாறன்தான் அவர்.
ஒரு நல்ல மனிதரை தனது ஆட்டோவில் அழைத்து சென்ற மனநிறைவுக்கு என்ன விலை வைத்தாலும் ஈடாகாது என்னும் பாண்டியராஜன், தோழர் நன்மாறனைப் போன்ற நல்ல மனிதர்கள்தான் அரசியலுக்குத் தேவை என்றும் கூறினார். பலருக்கும் அரசியல் ஆசை துளிர்விடும் இச்சூழலில், இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருந்தும் ஒரு தோள் பை, வேட்டி சட்டையுடன் முதிய பருவத்திலும் சேவையாற்றும் நன்மாறன் என்றுமே மக்களின் தோழர்தான்.
இதையும் படிங்க: ஒரு சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் - பிரதமர் மோடி