மதுரை: உசிலம்பட்டி அருகேயுள்ள இ.கோட்டைபட்டியிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் நடுகல் சிற்பம் ஒன்று இருப்பதாகத் தொல்லியல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நடுகல்லில் வீரனும், அவரது மனைவியும் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அதிலிருந்த வீரன் தனது கையில் வளரி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், '3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாக இந்த நடுகல் திகழ்கிறது. வீரனும், அவரது மனைவியும் இருக்கும் அந்த சிற்பத்தில், வீரனின் ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் வளரி என்னும் ஆயுதமும் காணப்படுகிறது.
வளரியுடன் கூடிய இந்த நடுகல் சிற்பம் தனிச்சிறப்பு
'வளரி' என்ற ஆயுதத்துடன் இந்த நடுகல் காணப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது தமிழர்களின் மிகத் தொன்மையான வேட்டைக் கருவியாகும். ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடியினர்களால்கூட பயன்படுத்தப்பட்ட இந்த வளரி ஆயுதம், தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளிலுள்ள அருங்காட்சியகங்களில் இந்த வளரி ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் 'பூமராங்' என்ற வளரி ஆயுதம் தடை செய்யப்பட்ட காரணத்தால், பின்னால் இது வழக்கொழிந்து போய்விட்டது.
சுமார் 400 ஆண்டுகள் முன்பு வரை, மதுரையில் வளரி ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு, இந்த நடுகல்லும் ஒரு சான்றாகும். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் வெவ்வேறு வகையான ஆயுதங்கள் காணப்படுகின்றன. ஆனால், வளரியுடன் கூடிய இந்த நடுகல் சிற்பம் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்' என்றார்.
வளரியின் சிறப்புகள்
'வளரி' என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையர்களை அச்சுறுத்தி வந்தவர்கள், மருது பாண்டிய மன்னர்கள். குறிவைத்த இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே திரும்பிவரும் வளரி இருக்கும் வரை, மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள்.
அதனால் தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும், வெள்ளையர்கள் வளரியைத் தேடித்தேடி அழித்தனர்.
தற்போது வரை கள்ளர் சமுதாயத்தினர் தங்கள் கோயில்களில் இத்தகைய வளரியை வைத்து தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. சிலவற்றை இரும்பிலும் செய்திருப்பார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால், சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால், சீவித்தள்ளி விடும்.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வளரி மதுரை உசிலம்பட்டியிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு