மதுரையைச் சேர்ந்த செல்வராசு என்பவர் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மனுதாரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் கீழமை நீதிமன்ற வழக்கு விசாரணைகளின்போது தொடர்ச்சியாக ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது அவருக்கு பிணை வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்புள்ளது. ஆகவே அவருக்கு பிணை வழங்கக்கூடாது" என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நீதிமன்றம் பிணை அளிக்கும்பட்சத்தில் தலைமறைவாவது சாட்சிகளை கலைப்பது உள்ளிட்டவற்றை செய்ய மாட்டோம்" என உறுதி அளித்தார்.
இதையடுத்து நீதிபதி" தற்போதைய கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது.
மனுதாரர் 50,000 ரூபாயை செலுத்த வேண்டும். இந்த தொகையை மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், மதுரை புதுப்பட்டியில் உள்ள தொழுநோய் சிறப்பு மருத்துவமனையில் இருப்பவர்களின் நலனுக்காக செலவிடவேண்டும். மனுதாரர் தினமும் இரவு 7 மணி அளவில் மேலவளவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.