மதுரை திருமங்கலம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஸ்டாலின் பல்வேறு வழிகளில் போராடியும் அவையெல்லாம் பொய்த்துப் போனதால் கடைசியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். அவர், முன்னதாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் சுயநலத்தோடு இருந்ததால் தான் மக்கள் அதற்கு தோல்வியை பரிசாகக் கொடுத்தார்கள். இதற்கும் தோல்வியே பரிசாக கிடைக்கும். அவர் முதலமைச்சர் பதவி மீது வைத்திருக்கின்ற மோகம், ஆசை காரணமாகவே தமிழ்நாட்டை போராட்டக் களமாக மாற்ற நினைக்கிறார்" என்று விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறார். பல்வேறு துறைகளில் விருதுகளுக்கு மேல் விருதுகளை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஸ்டாலின் மக்களிடம் கதை சொல்லிப் பார்த்தார், வசனம் பேசி பார்த்தார், கடிதம் எழுதிப் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே வீதிக்கு வந்து போராடி பார்க்கிறார். அதிலும் அவருக்கு பலன் கிடைக்காது. எதிர்க்கட்சித் தலைவர் கூட்டி இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டம் என்பது எந்த ஒரு வினையையும், எந்த பலனையும் பெற்றுத்தராது" என்று தெரிவித்தார்.
மேலும், "திமுகவினர் சிறுபான்மை மக்களிடம் பொய் பரப்புரை செய்து விஷ விதைகளை விதைத்து விட்டார்கள். அதற்கு உரிய விளக்கம் கொடுத்து தான் அவர்களுக்கு உண்மையை சொல்லவேண்டும். அதிமுக சிறும்பான்மை மக்களுக்கு சிறு தீங்கும் அளித்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மிகப்பெரிய திட்டம். தற்போது இந்த திட்டத்திற்கான சாலைகள் மேம்படுத்தும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது மதுரைக்கு பெருமை சேர்க்கும் வானளாவிய எய்ம்ஸ் மருத்துவமனையாக அமையும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: