மதுரை கோயில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 18ஆம் தேதி காளவாசல் பகுதியில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் மகளுக்கு சுபநிகழ்ச்சி வைத்துள்ளார்.
திருமண மண்டபத்தில் அறையில் சுபநிகழ்ச்சிக்காக வைத்திருந்த, சுமார் ஒரு லட்ச ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மண்டபத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒரு லட்சம் ரூபாயைத் திருடியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுவனை பிடித்து அவனிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். பின் காவல் துறையினர் சிறுவனை எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.