மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது.
கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதியை வலம்வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பர். சித்திரைத் திருவிழா நடைபெறும் பத்து நாள்களும் மதுரை மாநகரே விழாக்கோலம்பூண்டு காட்சியளிக்கும்.
இந்நிலையில் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறே மீனாட்சி சொக்கநாதரை தரிசித்துவருகின்றனர். சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் பவனி வந்து அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் சொக்கநாத வெண்பாவில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ...
"வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை
இந்த வகை ஆசையெல்லாம் என் மனத்தின் - வந்தும் இனிச்
சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்
பேராத சொக்கநாதா"