மதுரை: தமிழ்நாட்டின் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் ஒன்று ’மதுரை ஆதீனம்’. இந்த மடத்தின் 292ஆவது பீடாதிபதியாக சீர்காழியைச் சேர்ந்த அருணகிரிநாதர் 1980ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தார்.
மறைந்த அருணகிரிநாதர்
கடந்த சில நாள்களுக்கு முன் மதுரை கே.கே.நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், ஆகஸ்ட் 13ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார்.
அதனையடுத்து முனிச் சாலை சந்திப்பு அருகே உள்ள ஆகின மடத்துக்குச் சொந்தமான இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அடுத்த சன்னிதானம்
இதையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை மதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிவிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுர ஆதீனம் முன் நின்று நடத்திவைத்து அருளினார்.
மேலும், மதுரை ஆதீன மடத்தின் ரகசிய அறையில் இருந்த அசையும் அசையா சொத்துகளின் பத்திரங்கள், ரொக்கப் பணம், தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் எடுத்துப் பார்க்கப்பட்டு புதிய ஆதீனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இன்று பட்டம் சூட்டு விழா
இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் புதிய பீடாதிபதி ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இன்று (ஆக.23) பட்டம் சூட்டப்பட உள்ளது. மேலும், மறைந்த ஆதீனம் அருணகிரிநாதருக்கு குரு பூஜை மற்றும் சிறப்புப் பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள், முக்கிய நபர்கள் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புதிய ஆதீனம் ஆசி வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980க்கு பிறகு பட்டம் சூட்டுவிழா
1980க்குப் பிறகு நடக்கும் இந்த பட்டம் சூட்டும் விழாவில், புதிய ஆதீனத்தை சிறப்புப் பல்லக்கில் அமர வைத்து, ஆதீன வளாகத்தை ஊர்வலமாகச் சுற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது.
ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமி
மதுரை ஆதீன மடத்தில் இன்று (ஆக.23) காலை 11 மணிக்கு மேல் அவர் 293ஆவது மதுரை ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமி முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.
அருணகிரிநாதர் உயிருடன் இருந்தபோதே இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த இவர், தினசரி வழிபாடுகள் உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க: தேசியக்கொடி மீது பாஜக கொடி... இது சரியா? - கேள்வி எழுப்பும் காங்கிரஸ்