ஈரோடு: ஒருமணி நேரம் மேய்ச்சலில் இருந்து கொண்டு சாலையில் வரும் வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்து கொண்டிருந்த யானைக் கூட்டத்தை சாதுர்யமாக இளைஞர்கள் விரட்டியடித்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து தீவனம் தேடி வரும் யானைகள் அருகாமையில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் ஊருக்குள் புகும் யானை கட்டுப்படுத்த வேண்டும் என புங்கார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று(நவ.30) புங்கார் மீன் பண்ணையிலிருந்து வந்த யானைக்கூட்டம் அணையின் பழத்தோட்டத்துக்கு வந்தன. அங்கு சுமார் ஒரு மணிநேரமாக சாலையோரம் புற்களை மேய்ந்தது. இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் அணை ஊழியர்கள் தவித்தனர். இதற்கிடையே இரு சக்கர வாகனத்தில் சென்ற கிராம மக்களை யானைகள் துரத்தின.
இந்நிலையில், யானை போகாமல் நீண்ட நேரமாக அணை பழத்தோட்டத்தில் முகாமிட்டதால் சற்று மாற்றாக யோசித்த இரு இளைஞர்கள் பைக்கில் சைலன்ஸரை கழற்றிவிட்டு யானை கூட்டத்தின் முன்பாக செல்லும் சாலையில் சென்றனர். பைக்கின் சத்தம் அதிக ஒலியை ஏற்படுத்தியதால் காரணமாக யானையால் நிற்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தது.
இதை பார்த்த மற்ற யானைகளும் பிளிறியபடி காட்டுக்குள் ஓடிச்சென்றன. அப்போது வேட்டைத்தடுப்பு காவலர்களும் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் வராதபடி துரத்தினர். இளைஞர்களின் சாதுர்யமான செயலால் யானையை விரட்ட உதவியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: குரங்குகளுக்குப் பயம் காட்டும் பொம்மை புலி: நவமலை மக்களின் புது வழி