சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து பசுமை நீங்கியதோடு, பள்ளங்கள், ஓடைகள், தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்குகளுக்கு தீவனம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மே மாதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் தொடர் மழை பெய்ததால் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் துளிர்த்து தற்போது பச்சைபசேலென அழகாகக் காட்சியளிக்கிறது. வனப்பகுதி பசுமையாக மாறியதோடு வனவிலங்குகளின் தீவன பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் வனத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வனப்பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் தீவனம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றன.