திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய, திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாகத் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களால், மலைப்பாதையில் பழுது ஏற்பட்டும், கவிழ்ந்தும், விபத்து ஏற்படுவதால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இப்போக்குவரத்து பாதிப்பைத் தடுக்க மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் சரக்கு வாகனங்கள், செல்ல அனுமதி இல்லை எனக் கடந்த ஜனவரி மாதம் முதல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனைச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இரவில் காத்திருந்து, காலை 6 மணிக்கு, ஒரே நேரத்தில் செல்வதால், வாகன நெரிசல் ஏற்பட்டுவந்தது.
இதனைத் தொடர்ந்து 24 மணி நேரமும் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனச் சுமையுந்து (லாரி) உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக் கருத்திற்கொண்டு, இன்று இரவு முதல் திம்பம் மலைப்பாதை வழியாக, சரக்கு வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாகவும், 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள சுமையுந்துகள், அதிக பாரம் மற்றும் அதிக உயரம் கொண்ட வாகனங்கள், திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதி இல்லை எனக் காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.