ஈரோடு: Christmas Celebrations: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து, பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து குறைந்தது.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டை முன்னிட்டு மல்லிகைப்பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜன் நகர், தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளன.
இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்பட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் குறைவு
இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது.
இதன் காரணமாக மல்லிகைச் செடிகளில் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. வழக்கமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் 10 டன் முதல் 15 டன் வரை மல்லிகைப் பூக்களை தினசரியாக விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் 1 டன்னுக்கும் குறைவான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
உச்ச கட்ட விலையில் மல்லிகைப்பூ
இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ 2,117 க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை கிலோ 1,120 ரூபாய்க்கும், செண்டுமல்லி 145 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 185 ரூபாய்க்கும், கனகாம்பரம் 900 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க:Rashtra Sevika Samiti: ராஷ்டிரிய சேவிகா சமிதி பயிற்சி முகாமிற்கு தடை விதிக்கக் கோரி மனு