ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமிற்கு 1991ஆம் ஆண்டு வந்த இலங்கை தமிழர்கள், 1994ஆம் ஆண்டு முதல் முருக பக்தர்களுடன் ஒன்றிணைந்து அலகு குத்தி பறவை காவடி ஊர்வலம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.
அதன்படி 25ஆம் ஆண்டு விழாவையொட்டி பறவை காவடி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக டணாய்க்கன் கோட்டை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அலகு குத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட முருகன் தேர் பவனியுடன் பக்தர்கள் பறவை காவடியில் தொங்கியபடி மேளதாளங்களுடன் ஊர்வலம் சென்றனர். மேலும், அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள் காவடியாட்டம் ஆடியபடி சென்றனர்.
டணாய்க்கன் கோட்டையில் புறப்பட்ட ஊர்வலம் பவானிசாகர் பேருந்து நிலையம், மார்க்கெட் சதுக்கம், சிவில் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் வழியாக இலங்கை அகதிகள் முகாமில் உள்ள நாகம்மாள் ஆலயத்தை வந்தடைந்தது. அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நாகம்மாள் ஆலயக்குழு தலைவர் நடராஜ், முகாம் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.