ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சாணார்பதி பகுதியில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 600க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை கீரிபள்ளம் ஓடையின் அக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வார்கள். இந்த நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு கழிவு நீர் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் பழுதானது.
இதன் காரணமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது மீண்டும் ஏரியின் குறுக்கே பாலம் கட்டுப்படாத நிலையில், சாணார்பதி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து, அந்த ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து அக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த ஓடையில் கோபிசெட்டிபாளையம் பகுதியிலிருந்து கழிவுநீர் வருவதால் சேறும் சகதியாகவும், உடைக்கப்பட்ட பாட்டில்களுடன் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் இறங்கி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபடும்போது கழிவுநீரால் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இடிக்கப்பட்ட பாலம் அமைக்க பலமுறை அரசுக்கு மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பாலம் கட்ட 3 முறைக்கும் மேல் பூமிபூஜை செய்துவிட்டு பணிகளை இன்றுவரை தொடங்கவில்லை எனவும் அந்த ஊர் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இச்சூழலில், சாணார்பதி பகுதியில் வசித்த முருகையன் என்பவர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டியுள்ளதால் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து ஏரியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்தனர்.
பின்னர் அக்கரையில் உள்ள மயானத்திற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் வழியாக சென்று அப்பகுதி பொதுமக்கள் முருகையனின் உடலை அடக்கம் செய்தனர். ஒவ்வொரு முறையும் இதே நிலை தொடர்வதால், உடனடியாக பாலம் அமைத்துத்தர பொதுமக்கள் அரசிடம் முறையிட்டுள்ளனர்.