ஈரோடு: கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் மலைக்கிராமத்திற்கு குரும்பூர், அருகியம், மாக்கம்பாளையம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும்.
அப்போது இவ்வூரில் குறுக்கிடும் சில ஓடைகளையும் கடந்து செல்ல வேண்டி இருக்கும். அந்த ஓடைகளில் குறைந்தளவு நீர் சென்று கொண்டிருப்பதால், காய்கறி லாரிகள், டெம்போ மற்றும் அரசுப்பேருந்துகள் தினந்தோறும் அதன் வழியாக சென்று மலைக்கிராமங்களை அடையும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளநீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து குரும்பூர் ஓடைகளில் கலந்ததால், குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், காய்கறி லாரிகள் செல்ல முடியாமல் திரும்பின. வெள்ளப்பெருக்கு காரணமாக மாக்கம்பாளையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தும் இயக்கப்படவில்லை.
இதனால் இன்று(அக்.11) பேருந்தில் கடம்பூர் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் கிராமங்களிலேயே முடங்கினர்.
சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்று அரசுப்பேருந்து சர்க்கரைப்பள்ளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இடையில் சிக்கிக்கொண்டது.
நல்வாய்ப்பாக, இதனால் பள்ளி மாணவ,மாணவியர் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். அவர்கள் நடைபயணமாக அழைத்துச் சென்று அருகில் உள்ள அருகியம் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளம் வடிந்த பிறகு பேருந்து மீண்டும் சத்தியமங்கலம் வந்தது.
வெள்ளப்பெருக்கின்போது வாகன போக்குவரத்துப் பாதிக்கப்படுவதால் குரும்பூர், அருகியம் கிராமங்களிடையே உள்ள ஓடைப்பள்ளங்களில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆயுத பூஜை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்