ஈரோடு மாவட்டம் பெரியசெட்டிபாளையத்தில் அமைந்துள்ளது ஐயனார் திருக்கோயில். கடந்த 300 முதல் 400 ஆண்டுகளாக இக்கோயிலில் தண்டல்காரர்களாகப் பணியாற்றிய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இடமும் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியில் வசித்துவரும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஐயனார் திருக்கோயிலில் வழிபட்டுவந்தனர்.
இந்நிலையில் கோயிலைச் சுற்றி தனி நபர் ஒருவர் கம்பிவேலி அமைத்து சாமி தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், தடையை நீக்கி சாமி தரிசனத்திற்கு அனுமதியை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மனு குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தங்கள் சமூகத்திற்குச் சொந்தமான ஐயனார் திருக்கோயில் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்ததால் கடந்த 6 மாதங்களாக கோயிலுக்குச் செல்லாமலிருந்தவர்கள், தளர்வு வழங்கப்பட்டதற்குப் பிறகு கடந்த மாதத்தில் கோயிலுக்கு சென்றபோது கோயிலைச் சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்" என்றனர்.
கோயிலின் பின்புறமாக உள்ள நிலத்தை வாங்கிய பூபதி என்பவர் கோயிலையும் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்திருப்பதாகவும், சாமி தரிசனத்திற்காக செல்வதற்குக் கூட வழியின்றி கம்பிவேலி தடையாக இருப்பதால் அதனை அகற்றிட வேண்டும் என்று கேட்டால் ஆட்களை வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் ஏற்க மறுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டதால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செல்போன் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம்!