ஈரோடு: பவானி ஆறும் காவிரி ஆறும் சங்கமிக்கும் பவானிகூடுதுறையில், பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். கரோனா பரவல் பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக மக்கள் கூடுவதைத் தவிர்க்க, பவானி சங்கமேஸ்வரர் கோயிலின் பவானிகூடுதுறை மூடப்பட்டது.
தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகம் புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று(செப்.25) பக்தர்கள் திதி பூஜைகள் செய்ய அனுமதி அளித்துள்ளது. இதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.
பரிகார மண்டபம் மட்டுமின்றி, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்திலும் பூஜைகள் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்தும் பிண்டம் வைத்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர், பவானி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர். காவிரியில் அதிகமாக தண்ணீர் வருவதால் பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் மட்டுமே குளிக்க வேண்டும் என்றும், ஆழமான பகுதிக்குச்செல்ல வேண்டாம் எனவும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
ஆழமான பகுதியில் குளிப்பதைத் தடுக்க மீனவர்கள், தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் சிசிடிவி கேமரா மூலம் பக்தர்களை வரிசைப்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'அரசியலின் குரல்வளையை ஆன்மிகம் பிடிப்பது தகாது...!' - கவிஞர் வைரமுத்து